லோகிதராஜா நாகலட்சுமியும் நில்மினி குரேயும் சாதாரண நண்பர்கள் என்ற வரைவிலக்கணத்திற்கு அப்பாற்பட்டவர்கள்; அவர்கள் வியாபாரப் பங்காளர்கள், ஆயுட்கால ஜோடிகள், சகோதரிகள். தொன்னூறுகளின் ஆரம்பத்தில் வெடித்த யுத்தம் இவர்களின் நெருக்கமான பால்யகால நட்பினை வேரறுத்ததுடன் நில்மினியும் அவரின் குடும்பமும் ஆக்கிரமிப்பு மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளிடம் இருந்து தப்புவதற்காக ஆபத்துமிகு கடல் பயணத்தின் மூலம் தப்பிச்சென்றனர். பல தசாப்தங்களின் பின்னர் தனது சொந்த ஊருக்குத் திரும்பிவருவதற்கு நில்மினி தீர்மானித்தபோது தனது விசுவாசமான நண்பி தனக்காகக் காத்திருப்பதைக் கண்டார்.
லோகிதராஜாவின் குடும்பம் எப்போதுமே சுற்றுலாத் துறையில் வியாபாரம் செய்துவந்திருக்கின்றது. அவரின் சிறு உணவுச்சாலையும் தங்கும் விடுதியும் உலகம் முழுவதுமுள்ள விருந்தினர்களைப் பல தசாப்தங்களாக வரவேற்றிருக்கின்றது. இவர்களில் பலர் மீண்டும் மீண்டும் திரும்பி வந்திருக்கின்றனர். இச்சுற்றுலாப் பயணிகள் இவருக்கு மிகவும் விசுவாசமானவர்களாக இருந்து வருவதுடன் இவருக்குக் கிரமமாகக் கடிதம் அனுப்பிவருகின்றனர். பல வருடங்களாக இவர் பத்திரமாகக் காத்துவைத்திருக்கும் கடிதக் கட்டுக்களும் புகைப்படங்களும் இதற்குச் சான்றாக இருக்கின்றன. நில்மினியின் தங்குமிட விடுதி சற்றுப் புதியது. 4 வருடங்களுக்கு முன்புதான் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நண்பிகள் இருவரும் பெருந்தொற்றின் தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் இவர்கள் ஒருவர் மற்றவரில் முன்னெப்பொழுதையும் விட அதிகமாகச் சார்ந்துள்ளனர். இயலுமானபோது வளங்களையும் பகிர்ந்துகொள்கின்றனர்.
இன்ஸ்பயர்ட் நிகழ்ச்சித்திட்டத்தினைப் பற்றி லோகிதராஜா கேள்விப்பட்டதும் அவர் நில்மினியையும் அதில் பதிவுசெய்துவிட்டார். “நாம் இருவரும் ஒன்றாக இதில் சேரவேண்டும் என நான் உண்மையில் விரும்பினேன்” என அவர் கூறினார். நிகழ்ச்சித்திட்டம் இருவருக்கும் பல விடயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கின்றது. நில்மினியும் அவரின் கணவரும் (முன்னாள் இராணுவ அதிகாரி) வரவுசெலவுத் திட்டம் தயாரிப்பதற்கும் கணக்குகளைப் பேணுவதற்கும் தங்களின் இலாபங்களை வினைத்திறனுடன் மீள் முதலீடு செய்வதற்கும் கற்றுக்கொண்டனர். “எங்களின் வியாபாரத்தினை ஒழுங்கமைப்பதற்கு நிகழ்ச்சித்திட்டம் உண்மையில் எமக்கு உதவியிருக்கின்றது” என அவர் உறுதியாகக் கூறினார். லோகிதராஜாவின் கணவர் 13 வருடங்களுக்கு முன்னர் இறந்த பின்னர் அவர் தனது வியாபாரத்தினை விஸ்தரித்தார். தொழில்முனைவராக இருப்பது இவருக்கு ஒன்றும் புதிதல்ல. இருப்பினும் 65 வயதிலும் கூட தனது செயற்பாடுகளை முன்னேற்றுவதற்கான வழிகளை இவர் தேடிக்கொண்டிருக்கின்றார். தற்போது நிகழ்ச்சித்திட்ட வழிகாட்டுனர்களில் ஒருவரின் ஆலோசனையின் படி லினோலியத்தைப் பயன்படுத்தி கடைத் தரைகளுக்குத் தரை விரிப்பிடுவதில் ஈடுபட்டுள்ளார்.
எப்போதும் திறமைமிக்கவரான லோகிதராஜா பெருந்தொற்றினால் தொழில் மங்கியிருந்த காலப்பகுதியில் பனை ஓலைகளைப் பயன்படுத்தி எவ்வாறு கூடை பின்னுவதென்பதை ஆறே மாதங்களில் கற்றுக்கொண்டு இப்போது அதில் ஈடுபட்டுள்ளார். ஏற்றுமதியாளர்களுக்கு அவற்றினை இவர் விநியோகித்துவருவதுடன் குறைநிரப்பு வருமானத்தினையும் ஈட்டிவருகின்றார்.