அரை நூற்றாண்டுக்கு முன்பு எப்படி இருந்தனரோ அப்படியேதான் துவான் ஆரிப் ஹாலிதீனும் அவரின் மனைவியும் இன்றும் காதல் ததும்பும் தம்பதிகளாக இருக்கின்றனர். ஒருவரின் வாக்கியத்தி்னை மற்றவர் முடித்துவைப்பதும் ஒருவர் மற்றவரைக் கண்களைச் சுழற்றிப் பார்ப்பதும் என ஒருவர் மற்றவரின் தனிவெளி பற்றிய உள்ளார்ந்த உணர்வுடன் காணப்பட்டனர். நோன்புப் பெருநாளன்று பெற்றோரைப் பார்க்க வந்த துவானின் பிள்ளைகளில் சிலர் பெருநாளைக்கு அடுத்த நாளும் அவர்களின் வீட்டில் இருந்தனர். துவானின் குடும்பம் பெரியது. துவான் தம்பதிகளுக்கு ஏழு பிள்ளைகள். கட்டாரில் உள்ள ஒரு மகனைத் தவிர ஏனைய அனைவரும் பெருநாளன்று தங்கள் பெற்றோரைப் பார்க்க வந்திருக்கின்றார்கள்.
ஏழு பிள்ளைகளை வளர்ப்பது என்பது இலகுவான காரியமல்ல. 40 வருடங்களுக்கு முன்னர் ஹாலிதீன் ஆரம்பித்த சுவை ததும்பும் பதப்படுத்திய உணவு வியாபாரம் தான் இதற்கு ஒரு வகையில் உதவியது. “அச்சாறும் (மலே ஊறுகாய்) ஊறுகாயும்தான் (தேசிக்காய் ஊறுகாய்) எமது பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்பி அவர்களை வளர்த்து அவர்களை வெற்றிபெற்றவர்களாக ஆளாக்க எமக்கு உதவியது” என பாத்தும்மா குறிப்பிட்டார். பாத்தும்மா காலியைச் சேர்ந்தவர். இலங்கையின் தென்கோடியில் இருந்து தனது தாயாரின் ஊரான மட்டக்களப்புக்குத் தனது 16 ஆவது வயதில் வந்ததை பாத்தும்மா நினைவுகூர்ந்தார். இங்கேதான் துவானையும் சந்தித்தார்.
பாத்தும்மாவின் குடும்பத்தின் வழிவந்த பழமையான உணவுக் குறிப்பில் இருந்தே பதப்படுத்திய உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இன்று வரை கடை நடத்தி வரும் துவான் பழங்களையும் மரக்கறிகளையும் விற்பனைசெய்து அவற்றின் விற்கப்படாத இருப்புக்களை வீட்டுக்கு எடுத்து வருவதால் அவரின் மனைவி அவற்றினைப் பதப்படுத்துகின்றார். இவ்வாறு தயாரிக்கப்படும் உற்பத்தி செலவுச் சிக்கனம் மிக்கதாக மாறியது. நண்பர்களின் மத்தியிலும் குடும்பங்களின் மத்தியிலும் ஊறுகாய் நன்கு பிரபலமாகிய பின்பே தம்மிடம் சந்தைப்படுத்தக்கூடிய உற்பத்தி இருக்கின்றது என்பதைத் தம்பதியினர் உணர்ந்துகொண்டனர். துவானின் கடை மூலமாக போத்தலில் அடைக்கப்பட்ட ஊறுகாயை அவர்கள் விற்பனை செய்யத் தொடங்கியதுடன் பெருமளவு மலே ஊறுகாய் (நல்ல பிரியாணியுடன் தொட்டுக்கொள்ள அவசியம் இருக்கவேண்டியது) பெரும் நிகழ்வுகளிலும் வைபவங்களிலும் விநியோகிக்கப்பட்டது.
தமிழ் மக்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் கிராமத்தில் வாழும் தம்பதியினருக்குச் சகவாழ்வு என்பது ஒன்றும் புதிதல்ல. இருப்பினும் இன்ஸ்பயர்ட் நிகழ்ச்சித்திட்டம் அதில் கலந்துகொண்ட தமிழ் மற்றும் சிங்களச் சமுதாயத்தினைச் சேர்ந்த ஏராளமான பல புதிய வாடிக்கையாளர்களை இவர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இவர்களில் ஒருவர் முதலீட்டாளராக மாறி வியாபாரத்தினை அண்மையில் விஸ்தரிப்பதற்கு இன்றியமையாத கடனினையும் வசதிப்படுத்தியிருக்கின்றார்.
இன்ஸ்பயர்ட் நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்துகொண்டதில் இருந்து, தொழில்முனைவுமிக்க தம்பதியினருக்குப் புதிய உந்துசக்தி கிடைத்திருக்கின்றது. “எமது உற்பத்திக்கு வியாபாரச் சந்தையில் மிகவும் சாதகமான பதிற்செயற்பாடே கிடைத்தது” எனத் துவான் உணர்வுபொங்கக் கூறினார். தம்பதியினர் முயற்சி செய்ய ஆவலாக இருந்த பாரிய அளவிலான உற்பத்திக்கான பொதியிடல் உத்திகளையும் அணுகுமுறைகளையும் நிகழ்ச்சித்திட்டம் இவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. தான் புதிதாக உருவாக்கிய சந்தைப்படுத்தல் பொருட்களையும் தனது போத்தல்களுக்கான புத்தம் புதிய லேபல்களையும் துவான் பெருமிதத்துடன் காட்டினார். நாடு முழுவதுமுள்ள நிறுவனங்களுக்குத் தனது உற்பத்திகளை விநியோகிப்பதே இப்போது துவானின் கனவாகும்.