கிழக்கு மாகாணத்தின் இந்தப் பகுதியில் கைத்தறி என்பது நீண்ட காலமாகப் பாரம்பரியக் கைத்தொழிலாக இருந்து வருகின்றது. எவ்வாறாயினும், கடந்த சில தசாப்தங்களாக மலிவாக உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஆடைகளின் வருகை காரணமாக இத்தொழிற்துறை என்பது காணாமலே போய்விட்டது என்றுதான் கூறவேண்டும். “எனது தாயும் தந்தையும் ஆடை நெய்வதைச் சிறுபிள்ளையாக இருக்கையில் பார்த்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன்” என ரிசானா ஏக்கத்துடன் கூறுகின்றார். “எனது குடும்பத்தில் தலைமுறை தலைமுறைகளாக வழிவந்த ஒரு பாரம்பரியமாக அது இருந்தது.” இறுதியில் அவரின் பெற்றோர்கள் மிகவும் வயதானவர்களாக ஆனதும் வியாபாரம் துண்டிக்கப்பட்டு அவர்களின் தறிகளும் விற்கப்பட்டுவிட்டன.
வாழ்க்கை தனக்கு முன்னால் போட்டிருந்த சவால்களை வெற்றிகொள்ளக் கட்டற்ற பலத்தினைத் திரட்ட நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு திடசங்கற்பமிக்க ரிசானா என்ற பெண்னே நாணம் என்ற குடையில் மறைந்திருந்தார். ரிசானாவை அவரின் கணவர் பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் கைவிட்டுச் சென்றபோது இரண்டு பிள்ளைகளுடன் ரிசானா நிர்க்கதியாக்கப்பட்டார். அவருக்குத் தெரிந்திருந்த ஒரே தொழில் கைத்தறி நெசவுதான். ஆனால் அந்த அறிவும் பார்வை ஞானமாகவே இ்ருந்தது. “எனது பிள்ளைப் பராய நினைவுகள்தான் எனக்கிருந்தன. நான் ஒருபோதுமே எதையும் நெய்ததில்லை. நெய்ததைப் பார்த்துத்தான் இருக்கின்றேன்”.
இவற்றால் மனம் தளராத ரிசானா வாடகைத் தறி கொண்டு ஆடைகளைத் தயாரிக்கத் துணிச்சலுடன் களமிறங்கினார். ஆரம்பத்தில் தறியினை வாடகைக்கு விட்டவரிற்காக வேலை செய்ய நேரிட்டது. ரிசானா தயாரித்தவற்றிற்கு அற்பமான ஊதியமே கிடைத்தது. இன்ஸ்பயர்ட் நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றி மூன்றாந் தரப்பு முதலீடாக இரண்டு லட்சம் ரூபாவினைப் பெற்ற பின்னர் தனது சொந்தத் தறியினை ரிசானாவினால் வாங்க முடிந்தது. இப்பொழுது ரிசானா முற்றுமுழுவதும் சுயாதீனமானவராக இருக்கின்றார்.
ரிசானா அவரின் வியாபாரத் திறன்களை முன்னேற்றுவதற்கு நிகழ்ச்சித்திட்டம் உதவியுள்ளது. “நான் மக்களுடன் சேர்ந்து செயற்படக் கற்றுக்கொண்டுள்ளேன். இப்போது வெளியுலகுடன் ஈடுபாடு கொள்பவளாக இருக்கின்றேன்” என அவர் மகிழ்வுடன் குறிப்பிடுகின்றார். ரிசானா இப்போது பிரதேசத்தில் மிகுந்த கிரரக்கியுள்ள கைத்தறி நெசவாளர்களில் ஒருவராகத் திகழ்கின்றார். நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இவரின் சந்தைத் தளம் பரந்து விரிந்துள்ளது. இவரின் வழமையான வாடிக்கையாளர்களெல்லாம் இவர் சம்பாதித்துக்கொண்ட தமிழ் மற்றும் சிங்கள நண்பர்களே. “நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக எனது நெசவு வேலை பற்றிக் கேள்விப்பட்ட பின்னர் அயல் கிராமத்தைச் சேர்ந்த பலரும் என்னைத் தேடி வருகின்றனர்” என அவர் கூறினார். இவரின் உற்பத்திகளுள் சாரத்துக்கு (லுங்கி) மிகுந்த கிராக்கி காணப்படுகின்றது. இவை அடிக்கடி விற்கப்படுவதுடன் பிரதான கலாசாரப் பண்டிகைகளுக்கு முன்னர் விசேடமாக நன்கு விற்பனை செய்யப்படுகின்றன.